×

தட்சிண மீமாம்சை

இந்திய தத்துவ மரபில், ‘மீமாம்சை’ என்ற ஒரு பிரிவு உண்டு. ‘மீமாம்சை’ என்ற சொல்லுக்கு ‘சரியான அறிவைப் பெறுவதற்கான சரியான ஆராய்ச்சி ‘(Right Inquiry for Right Knowledge) என்பது பொருள். மேலும் ‘மதிப்பிற்குரியசிந்தனை’ (Profound Thought) என்றும் கூறப்படும். பாபா எங்ஙனம் பக்தர்களிடம் தட்சிணை பெற்றார் என்பதை ஹேமத்பந்த் சாயி சத்சரித்திரத்தில் ‘மீமாம்சா’ என்னும் சொல்லின் பொருளைக் கொண்டு ‘தட்சிண மீமாம்சை’ அதாவது ‘தட்சிணையைப் பற்றிய உயர்ந்த தத்துவம்’ என்று விளக்கிக் காட்டுகிறார்.

இது ஒரு கவித்துவமான சொல்லாடல் பொதுவாக நம் தத்துவ மரபில் வேதத்தின் கர்ம காண்ட ஆராய்ச்சியை பூர்வ மீமாம்சை என்றும் ஞான காண்ட ஆராய்ச்சியை உத்தர மீமாம்சை என்றும் கூறுவது வழக்கம். இந்த சொற்களில் பூர்வ, உத்தர என்பது வேதத்தின் பூர்வ, உத்தர பாகங்களைக் குறிப்பிட்டாலும், பூர்வ என்பதற்கு கிழக்கு, உத்தர என்பதற்கு வடக்கு என்றும் பொருள் உண்டு.
அதனால் தெற்கு என பொருள் படும் படியும், அதே நேரத்தில் தட்சிணை என்ற காணிக்கை யின் தத்துவத்தையும், தட்சிணாமூர்த்தியாக இருந்து தட்சிணம் என்ற ஞானத்தை பாபா நமக்கு வழங்குவதாலும், தட்சிண மீமாம்சை என்று சுவைபடக் குறிப்பிடுகிறார் ஹேமத்பந்த்.

பாபா பக்தர்களிடமிருந்து வாங்கிய தட்சிணையின் தத்துவம் தான் என்ன? பாபா ஒரு பக்கிரியாக பற்றின்றி இருக்கும் பொழுது அவர் ஏன் தட்சிணை கேட்க வேண்டும்? ஆரம்ப காலங்களில் பாபா எரிக்கப்பட்ட தீக்குச்சிகளை தம் பையில் சேமித்து வைத்திருந்தார். எவரிடமிருந்தும் பாபா எதையும் ஒரு போதும் கேட்கவில்லை. யாராவது ஒரு பைசாவோ அல்லது இரண்டு பைசாக்களோ அவர் முன்னால் வைத்தால் அவர் விளக்குக்கு எண்ணெயும் சில்லிமுக்குத் தேவையான புகையிலையும் வாங்கிக்கொள்வார்.

எல்லோரிடமிருந்தும் தட்சிணை கேட்கவில்லை. கேட்காமலே சிலர் தட்சிணை தந்தால் அவர் அதைச் சில நேரங்களில் ஏற்றுக் கொண்டார். மற்ற நேரங்களில் மறுத்து விடவும் செய்வார். சில குறிப்பிட்ட அடியவர்களிடமே திரும்ப திரும்பக் கேட்டார். பாபா தங்களிடம் கேட்க வேண்டும் அப்பொழுது தாம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவர்களிடம் கேட்பதேயில்லை. பாபாவின் விருப்பத்திற்கு மாறாக யாரேனும் அதை சமர்ப்பித்தால் அவர் அதைத் தொடுவதில்லை.

அதை அப்பால் எடுத்துக் கொள்ளும்படி சொல்லி விடுவார். பக்தர்களின் விருப்பம், பக்தி இவைகளுக்கு ஏற்றவாறு அந்தந்த பக்தர்களிடம் தட்சிணை கேட்டார். யாரேனும் ஒருவர் மூலம் தட்சிணை அனுப்பபட்டு இருந்தால், அதனை அந்த நபர் மறந்துவிட்டால் ஞாபகப்படுத்தி வாங்கிக் கொள்வார். சில சமயத்தில் தட்சிணையாகக் கொடுத்ததில் இருந்து கொஞ்சம் எடுத்துக் கொண்டு, மீதியை வழிபாட்டிற்கோ அல்லது பூஜை அறையில் வைக்கும் படியோ கேட்டுக் கொள்வார்.

நாந்தேட் என்னும் இடத்தைச் சேர்ந்த ரத்தன்ஜீ ஷபூர்ஜீ வாடியா பாபாவை வணங்கி தமக்குக் குழந்தைப் பேறு அருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். உடனே பாபா அவரிடம் ஐந்து ரூபாய் தட்சிணை கேட்டார். ரத்தன்ஜி உடனே ஐந்து ரூபாயை எடுத்துக் கொடுத்தவுடன், பாபா தாம் ஏற்கனவே ரூபாய் 3-14-0 தொகையை பெற்றுக் கொண்டதாகவும் தற்போது ரூபாய் 1-2-0 மட்டுமே கொடுத்தால் போதும் என்றும் கூறினார். ரத்தன்ஜி அப்படியே கொடுக்க பாபா அவரை ஆசீர்வதித்து, அவரது இதயத்தின் ஆசையை அல்லா நிறைவேற்றுவார் என்று கூறினார்.

தன் வீட்டிற்குத் திரும்பிய ரத்தன்ஜி, பாபா எப்படி தம்மிடமிருந்து ரூபாய் 3-14-0 முன்பே பெற்றிருக்க முடியும் என்பதைப் பற்றிச் சிந்தித்தார். ஏனெனில், அவர் சீரடிக்குச் சென்று பாபாவை தரிசனம் செய்வது இதுதான் முதல் முறை. இதைச் சொல்லி தாஸ்கணுவிடம் இதற்குப் பொருள் என்ன என்று கேட்டார். தாஸ்கணுவிற்கும் அது ஒரு புதிராகத்தான் இருந்தது. அதைப் பற்றி நீண்ட நேரம் சிந்தித்தவுடன் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

ஒருமுறை தாஸ்கணு ரத்தன்ஜி வீட்டிற்குப் போன போது அங்கே மௌலானா சாஹேப் என்ற மௌல்வி வந்திருந்தார். ரத்தன்ஜி அவரை வரவேற்று விருந்து கொடுத்தார். அப்பொழுது தாஸ்கணுவிற்கு திடீரென்று மின்னல் வெட்டியது போல ஒரு சிந்தனை தோன்றியது. மௌல்வியை வரவேற்று செய்த செலவுக் கணக்கைப் பார்க்க வேண்டும் என்று தாஸ்கணு ரத்தன்ஜியிடம் கேட்டார். ரத்தன்ஜி அந்த செலவுக் கணக்கை எடுத்துப் பார்த்த போது அது சரியாக 3-14-0 ரூபாயாக இருந்தது.இருவரும் ஆச்சரியமடைந்தனர்.

ஒரு மஹானுக்காக செய்த செலவு பாபாவுக்கான தட்சிணையாக அமைந்தது என்பதன் மூலம், பரிபூரண நிலையில் பாபா அத்தனை மஹான்களோடும் ஒன்றாகவே இருக்கிறார் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். நாசிக்கைச் சேர்ந்த மஹான் நரசிங்க மஹாராஜும் பாபாவும் உடலளவில் ஒருவரை விட்டு ஒருவர் வெகுதொலைவில் இருந்தாலும் ஒருவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை மற்றவர் எப்போதும் அறிந்தே இருந்தனர். இருவரும் உள்ளார்ந்த ஒருமை நிலையில் ஊன்றி இருந்தனர்.

ஹரிபாவ் கர்ணிக், குருபூர்ணிமா தினத்தன்று, சீரடிக்கு வந்து பாபாவிற்கு உடைகளையும், தட்சிணையையும் கொடுத்து உரிய சம்பிரதாயங்களுடன் பாபாவை வணங்கி நின்றார். பின்னர் ஷாமா மூலமாக பாபாவிடம் விடை பெற்று துவாரகாமாயியின் படிகளில் இறங்கினார். அப்பொழுது பாபாவிற்கு இன்னும் ஒரு ரூபாய் தட்சிணை கொடுக்க எண்ணினார். எனவே மீண்டும் படிகளில் ஏறும் பொழுது ஷாமா பாபாவிடம் விடை பெற்றதால் ‘போய் வாருங்கள்’ என்று ஜாடை காண்பித்தார். அந்நிலையில் ஹரிபாவ் கர்ணிக் மனமில்லாமல் வீட்டுக்குக்குக் கிளம்பினார். வீட்டிற்கு வரும் வழியில் நாசிக்கில் உள்ள  காலாராமரின் கோயிலுக்குச் சென்றார். அப்போது கோயிலின் பெரிய கதவிற்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த மஹான்  நரசிங்க மஹாராஜ் தன்னைப் பார்க்க வந்த அடியவர்களை விட்டு விட்டு நேராக ஹரிபாவ் கர்ணிக்கிடம் வந்து ‘என் ஒரு ரூபாயைக் கொடு’ என்றார். ஹரிபாவ் வியப்படைந்து, மிக்க மகிழ்ச்சியுடன் ‘அந்த’ ஒரு ரூபாயைக் கொடுத்தார்.

பாபாவிடம் கொடுக்க எண்ணியிருந்த ரூபாயை எவ்வாறு நரசிங்க மஹாராஜ் வாங்கினார் என்று சிந்தித்துப் பார்த்தார். ஞானிகள் அனைவரும் பாபாவுடன் ஒன்றியவர்களே என்ற உண்மையும், அவர்கள் ஒத்திசைவுடன் ஒருமை நிலையில் செயல்படுகின்றனர் என்பதையும் விளக்கும் நிகழ்ச்சியாக இது அமைகிறது.

தட்சிணை மூலம் பாபா பெற்றுக் கொண்டது அத்தனையும் அதே நாளில் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுவார். அடுத்த நாள் காலை வழக்கம் போல ஏழை பக்கிரியாகி விடுவார். பாபா பகல் ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், மசூதியில் தமக்கு முன்னால் ஒரு திரையை தொங்கவிட்டுக் கொண்டு ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டிருப்பார். தன் பையிலிருந்து பத்து பதினைந்து காசுகளை எடுப்பார்.

இரண்டு பைசா, மூன்று பைசா, ஓர் அணா, இரண்டணா, நான்கணா, எட்டணா, ஒரு ரூபாய் என்று பலவித காசுகள் இருக்கும். அந்தக் காசுகளை தம் விரல் நுனியில் மெதுவாகத் தேய்த்து சில மந்திரங்கள் சொல்வார். சில காசுகளை மந்திரம் சொல்லாமலும் தேய்ப்பார்.இது நானாவுடையது. இது காகாவுடையது என்று கூறுவார். எவராவது அவரைப் பார்த்தால் உடனே எல்லாக் காசுகளையும் பையில் படக்கென்று போட்டுக் கொள்வார்.

ஒவ்வொரு காசையும் எடுத்து அதைக் கொடுத்தவரின் பெயரைச் சொல்லி கையில் பிடித்துக் கொண்டு திட்டுவார். அவருடைய ஒவ்வொரு திட்டும், வசவும் அந்த குறிப்பிட்ட பக்தருக்கு அவர் தரும் ஆசீர்வாதமாகும் (Blessing is Disguise) து குத்தா ஹை (நீ ஒரு நாய்) – நாயைப் போல விசுவாசம் இருக்க வேண்டுமென்று அர்த்தம்.

து கதா ஹை (நீ ஒரு கழுதை) – பயன் கருதாமல் சேவை செய்ய வேண்டும்.
து ஜல்ஜா (நீ எரிந்து போ) – உன்னுடைய கெட்ட பழக்கங்கள் அனைத்தும் எரிந்து போகட்டும்.
து மர்ஜா (நீ செத்து ஒழி) – உன்னுடைய கர்வம் அழியட்டும்.

சில சமயம், தன்னுடைய ஒரு சில வசவுகளுக்கு பாபாவே, அர்த்தம் சொல்லி, ‘இதை நீ இரகசியமாக வைத்துக் கொள்’ என்பார். சில நேரங்களில் பாபாவின் தட்சிணைக்கு வேறு அர்த்தங்களும் உண்டு. பேராசிரியர் G.G நார்கேயிடம் பாபா 15 ரூபாய் தட்சிணை கேட்டார். அதற்கு நார்கே தன்னிடம் இப்பொழுது இல்லையென்று தெரிவித்தார். அதற்குப் பாபா ‘உன்னிடம் பணம் இல்லையென்பதை நான் அறிவேன். யோக வாசிஷ்டத்தை வாசித்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து எனக்கு தட்சிணை கொடு’ என்றார். அந்த நூலிலுள்ள நீதிமுறைகளை ஒழுங்காக உய்த்துணர்ந்து அதை வாழ்வில் முறையாகவும் நிறைவாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அவர் கேட்கும் தட்சிணையாகும்.

அதேபோல தார்காட் அம்மையாரிடம் ஆறு ரூபாய் தட்சிணை கேட்கப்பட்ட பொழுது, தாம் கொடுக்க முடியாத நிலைக்கு அந்த அம்மையார் மிகவும் வருந்தினார். ஆனால் அவர் கணவர் காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாச்சரியம் என்னும் ஆறு உள் எதிரிகளான இவற்றை தட்சிணையாக பாபா கேட்டிருக்கலாம் என்று சொன்னார். அதனால் அந்த அம்மையார் சமாதானம் அடைந்து பாபாவிடம் கேட்க பாபாவும் அதற்கு உடன்பாடு தெரிவித்தார்.

கேப்டன் ஹடே பாபாவின் ஸ்பரிசத்தால் புனிதமாக்கப்பட்ட நாணயம் ஒன்று தன் வீட்டில் இருக்க வேண்டுமென ஆசைப்பட்டார். சீரடி செல்லும் தம் நண்பரிடம் அந்த நாணயத்தைக் கொடுத்து விட்டார். அந்த நண்பர் சீரடியில் பாபாவை நமஸ்கரித்த பின் முதலில் தமது ரூபாயை தட்சிணையாகக் கொடுக்க, பாபா அதை வாங்கித் தம் பையில் போட்டுக் கொண்டார். பின்னர் ஹடேவின் நாணயத்தைக் கொடுத்தார். அதை பாபா கையில் வாங்கி உற்றுப் பார்த்துவிட்டு, சுண்டிவிட்டு பிடித்து விளையாடினார்.

பின் அந்த நண்பரிடம், ‘உதிப் பிரசாதத்துடன் இதை அவரிடம் திரும்பக் கொடு. அவரிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டியதில்லை என்று கூறு. அமைதியுடனும், திருப்தியுடனும் வாழச் சொல்’ என்றார். அந்த நண்பர் திரும்பி வந்து ஹடேயிடம் அந்த புனிதமாக்கப்பட்ட நாணயத்தைக் கொடுத்து நடந்ததைக் கூறினார். பாபா எப்போதும் இம்மாதிரியான நல்ல எண்ணங்களை ஊக்குவித்து, அதை முறையாக நிறைவேற்றுகிறார் என்பதையும் நாம் அறியலாம்.

தான தர்மத்தை அடியவர்களுக்கு போதிப்பதற்காவும், அவர்களுக்குப் பணத்தின் மீதுள்ள பற்று குறைவதற்காகவும் அதன் மூலம் அவர்கள் மனது சுத்தமடைய வேண்டும் என்பதற்காக வே அவர்களிடமிருந்து தட்சிணைகளை பாபா பெற்றார். இம்முறையானது பணம் அளித்த பக்தருக்கு எல்லையற்ற அளவு நன்மையளிக்கிறது.

“தாம் வாங்கியது போன்று நூறு பங்குக்கு மேலேயே திரும்பக் கொடுப்பேன்” என்று பாபா அடிக்கடி சொல்வார். இதனை, ‘‘தட்சிண மீமாம்சை’’ – ‘தட்சிணையின் மதிப்பிற்குரிய சிந்தனை’ என்று ஹேமத்பந்த் குறிப்பிடுவது எவ்வளவு பொருத்தமாக அமைகிறது. எல்லாம் பாபா செயல்.

முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

The post தட்சிண மீமாம்சை appeared first on Dinakaran.

Tags : Dakshina Mimamsai ,Mimamsai ,
× RELATED எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!